வருக, வருக...

கல்வெட்டாராய்ச்சிப் புலவர், தமிழ்மாமணி , செந்தமிழ்க் கலாநிதி, 

சிவநெறிச் செல்வர், பேராசிரியர், கா.வேங்கடராமையா


தொண்டை நாட்டில், செங்கற்பட்டு மாவட்டத்தில் சென்னைக்கருகிலுள்ள போரூருக்குப் பக்கத்தில் காரம்பாக்கம் என்ற சிற்றூரில் கிருஷ்ணய்யா-வெங்கடசுப்பம்மாள் என்ற தம்பதியர் வசித்து வந்தனர். பலதலைமுறைகட்கு முன் ஆந்திர நாட்டிலிருந்து குடிபெயர்ந்த வேகிநாடு என்ற பிரிவைச் சேர்ந்த அந்தணர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தனர். அவர்களுள் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் உண்டு. இங்கே குறித்த தம்பதிகள்  ‘மந்திரவாதி’ என்ற குடும்பப் பெயரை உடையவர்கள்.

கிருஷ்ணய்யருக்குச் சாத்திரப் படிப்போ உலகியற் கல்வியோ அதிகம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் ஸ்ரீராம நவமியன்று மட்டும் ஒரு வைணவரும் அவரது துணைவியாரும் இவரது இல்லத்திற்கு வருவது வழக்கம். அவர்களுக்குத் தக்க பணிவிடை செய்து அவர்களைக் கொண்டு பூஜை செய்விப்பார். அவர்கள் உணவு உட்கொண்டு களைப்பாறி மாலையில் புறப்படுவது வழக்கம். இவ்வாறு பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. அந்தப் பெரியவரிடம் கிருஷ்ணய்யா,

‘ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோபூயோ நமாம்யஹம்’

 என்ற சுலோகத்தை உபதேசமாகப் பெற்றுப் பல ஆண்டுகள் நாள்தோறும் இடைவிடாமல் உருவேற்றிவந்தார். அவர் துணைவியார் தமது கணவருக்கு இணங்க நடந்து வந்தார்.

இந்தத் தம்பதியருக்குப் பெண்கள் மூவரும் ஆண்கள் மூவருமாக மக்கள் அறுவர் பிறந்தனர். வரிசைப்படி நான்காவது மகனாகவும் ஆண்களில் முதல்வராகவும் 4.4.1911 அன்று (பங்குனி மாதம் உரோகிணி நட்சத்திரத்தில்) திரு.கா.ம. வேங்கடராமையா பிறந்தார்.  இவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவே இந்த பிளாக்...