ஆன்றோர்களின் ஆசி உரைகள்

பல்வேறு சமய நிறுவனங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர் பேராசிரியர் கா.. வேங்கடராமையா அவர்கள். இவர் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் எல்லாப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட எஜமான விசுவாசி ஆவார். இவரை ஏற்றுப் போற்றிய துறவியர் சிலரின் வாழ்த்துரைகள் உங்கள் பார்வைக்காக இதோ.
____________________________________________________________________________
      
தருமை ஆதீனம்      திருவாவடுதுறை ஆதீனம்    கயிலை முனிவர்

____________________________________________________________________________
      
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம்,
26வது குருமகா சந்நிதானம்,
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

ஒரு தெலுங்கர், தமிழ் கற்று தமிழில் பேராசிரியராய், செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராய் 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் வளர்க்கும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் அதிபராகிய ஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் அவர்களின் ஆசிக்கு பாத்திரராகி, பன்னூறு மாணவர்களை தமிழ்ப் புலவராக்கச் செய்த அருந்தொண்டு பாராட்டிற்குரியது. செந்தமிழ்க் கல்லூரியில் தம் பிள்ளைகளையும் தமிழைப் படிக்கச் செய்து தமிழ் மக்களாக்கிய வேங்கடராமையாவின் தொண்டு பாராட்டிற்குரியது.

நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்தி விழிப்புணர்வு நல்க இவ்விழா அமைந்திடச் செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
____________________________________________________________________________
      
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
23-ஆவது குரு மகா சன்னிதானம்
சீர் வளர் சீர் சிவப்பிரகாச தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள்
அருள் வாழ்த்துரை

சைவத் திருமுறைகளையும், அரிய தமிழ் இலக்கியங்களையும் பதிப்பித்தும், இலக்கிய ஆய்வு நூல்கள் எழுதி வெளியிட்டுத் தமிழ் மரபு குறித்த செய்திகளைத் தாய்நாட்டிலும், அயல்நாடுகளிலும் பரவச் செய்தும், அரிய இலக்கண வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுத் தமிழ் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தும் தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய சிவத்திரு. கா.ம. வேங்கடராமையா அவர்களின் பணிகள் குறித்த வரலாறு இன்றைய தலைமுறைக்கு அவசியம்தெரியவண்டிய ஒன்றாகும்.
____________________________________________________________________________
      
சீரிய தமிழ்ச்செம்மல் கே.எம்.வி.
திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர்
கயிலை மாமுனிவர் ஸ்ரீ--ஸ்ரீ
காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்

சென்னை இலயோலா கலைக்கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றுத், தமிழ் எம்.ஏ., கற்றுத் தேர்ந்து, பனசைக்கு வந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஸ்ரீகாசிமடத்தின்பால் விடுதலறியா விருப்பும், தொடர்ந்த ஈடுபாடும், பற்றும் மிக்குடையாராய் இருந்தவர் கே.வி.எம்.வி. என்னும் மூன்றெழுத்துச் சுருக்கப் பெயரால் பலராலும் அடையாளம் காணப்பட்ட ’செந்தமிழ்ச் செம்மல்’ கே.எம். வேங்கடராமைய்யா.

பனசை ஸ்ரீகாசிமடத்தின் 20-ஆவது அதிபர் நம் முன்னவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளிடம் உழுவலன்பும் பக்தியும் பூண்டவர். அவர்கள் அருளாட்சியில் பலவாகிய அறக்கட்டளைகளைப் பொருட்செறிவுடன் பொருத்தப்பாடுள்ள மேற்கோள்களுடன் வடிவமைத்துத் தந்தவர். திருமடத்துச் சார்பில் இலக்கிய, தேவாரப் பண்ணிசை நிகழ்வுகளுக்குச் சென்று நடத்திச் சிறப்பித்தவர்.

தமிழ்க்கல்லூரி முதல்வராய்ப் பல்லாயிரம் மாணாக்கர்களை உருவாக்கி நல்வழிகாட்டியவர். திருமடத்தில் திருக்குறள், மற்றும் இலக்கியப் பதிப்புகள் செம்மையாய் வெளிவரப் பல காலம் உழைப்பை நல்கியவர்.

நம்மிடமும், என்றும் மாறாத அன்பும், தொடர்பும் பூண்டவர், ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் 300-ஆம் ஆண்டு விழாச் சிறப்புற நடத்திடப் பல வழியில் தொண்டு செய்தவர்.

‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’ என்னும் முதுமொழியைச் செயலில் காட்டியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் மொழியாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் ஒய்வின்றிப் பணிபுரிந்தவர். இறந்தும் இறவாப் புகழ் எய்தியவர்.

மக்கள் நால்வரைத் தமிழ்த்துறைக்கே ஆட்படுத்திச் சீரிய தொண்டுகள் ஆற்றச் செய்தவர்.

⏏⏏⏏