தமிழ்ப் பணிகள்

சிவநெறிச் செல்வரின்  செந்தமிழ்ப் பணிகள்

பேராசிரியர் .வே. பசுபதி
________________________________________

சிறந்த பதிப்பாசிரியராகவும், ஆய்வு நூல்கள் பல செய்த அறிஞராகவும், பல்லாயிரம் புலவர்களை உருவாக்கிய பேராசிரியராகவும், கல்வெட்டாய்வாளராகவும் விளங்கியவர்; மதுரை ஆதீனகர்த்தரால் ‘சிவநெறிச் செல்வர்’ என்ற பட்டமளித்துப் பாராட்டப்பெற்றவர், நினைவில் வாழும் தமிழறிஞர் கா.ம. வேங்கடராமையா.

இவர் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். திருக்கழுக்குன்றத்தில் திருநாவுக்கரசரின் பக்திப் பனுவல்கள் பற்றி இவர் உரையாற்றியதை மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த தருமை ஆதீனத் தலைவர்  பயண இடைநிறுத்தத்தில் கேட்டார்கள். அதன் பயனாகத் தருமையாதீனத்துடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன் விரிவாகத் திருப்பனந்தாள் காசித்திருமடம் அதிபர் அழைப்பின் பேரில் திருப்பனந்தாள் காசித்திருமடம்  தொடங்கியிருந்த  ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அக்கல்லூரியை அரசு மற்றும் பல்கலைக்கழக ஒப்புதல் கல்லூரியாகத் தரம் உயர்த்தினார்.
  
முதற்பதிப்பு

1949- ஆம் ஆண்டு இவர்தம் முதற்பதிப்புக் காசித்திருமடம் வெளியீடாக வெளிவந்தது. காரைக்காலம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை ஆக்கி வெளியிட்டார். திருமுறைகளுக்கு உரை எழுதினால் இறந்துவிடுவார்கள் என நம்பிய காலம் அது. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு திருமடத்தின் வெளியீடாகவே குறிப்புரையுடன் அற்புதத் திருவந்தாதியை வெளியிட்டார்.

பதிப்பு முறை

காசித்திருமடத்தின் வழியாகப் பன்னிரு திருமுறைகள், மூன்று புராணங்கள் ஆகியவை வெளிவந்தன. முப்பெரும் புராணங்கள் எனச் சைவர் கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், பெரியபுராணம் ஆகியவற்றைக் குறிப்பிடுவர். இவற்றைச் சிவனின் மூன்று கண்களுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் மரபும் உண்டு.

இந்நூல்களின் பதிப்பாசிரியர்கள் வேறு பலர் எனினும், பதிப்பு முறையையும் செயல்களும் இவருடையனவே என்பது அப்பதிப்புகளின் முன்னுரைகளைப் படித்தால் விளங்கும்.

ஒரு நூலின் தரம் தாளிலேயோ கட்டுமானத்திலேயோ மட்டும் அமைவதில்லை; அச்சுக்குக் கொடுக்கும் முன் எடுத்துக் கொள்ளும் பல்வேறு முயற்சிகளிலேயும் இருக்கிறது.

பழைய இலக்கியம், இலக்கணம், திருமுறை முதலிய நூல்களை அச்சிடும் முன்பாக அதற்குமுன் வெளிவந்த அந்நூலின் பதிப்புக்கள் அனைத்தையும் திரட்ட வேண்டும். பின்னர் அவற்றை ஒப்புநோக்க வேண்டும். சொல் அல்லது தொடர் வேறுபாடுகள் இருப்பின் அவை பாடபேதங்களா அல்லது அச்சுப்பிழைகளா என்று கண்டறிய வேண்டும். இப்படிக் கண்டறிவதற்கு மூலஒலைச்சுவடிகள் சிலவற்றையேனும் வைத்துக்கொண்டு ஒப்பு நோக்க வேண்டிவரும். இவை கடினமான பணிகள் எனினும் நுண்ணாய்வு செய்யும் அறிஞர்களுக்கு இத்தகு பணிகளுக்குப் பின்வரும் பதிப்புகளே பயனுடையவையாக அமையும்.

தமிழறிஞர் கா.ம. வேங்கடராமையா காசிமடம் வெளியீடுகளாக வந்த பன்னிரு திருமுறைகள், முப்பெரும் புராணங்கள் ஆகியவற்றை அச்சுக்குக் கொடுக்கும்முன் இத்தகைய பணிகளைச் செய்தார்.

அனைத்துப் பதிப்புகளிலும் நூலாசிரியர் வரலாறு இடம்பெறச் செய்தார். அவ்வந் நூலாசிரியர் பற்றியோ, நூல் பற்றியோ, நூற்செய்திகள் பற்றியோ கல்வெட்டுகளில் இருப்பின் அதனைக் குறிப்பிடுதல் இவரின் வழக்கமாகும்.

 உ.வே.சா. அவர்களின் பதிப்பு முறைமை ஒன்றனை இடைப்பிறவரலாக இங்குச் சிந்தித்தல் தகும். உ.வே.சா. நூற்பதிப்புச் செய்யும்பொழுது அந்நூலில் காணப்பெறும் அரசர் பெயர்கள், வரலாறுகள், புலவர் பெயர்கள், வரலாறுகள், அக்கால அரிய வழக்கங்கள், தாவரப் பெயர்கள், விலங்குப் பெயர்கள், ஆறுகள், மலைகள், ஊர்கள் முதலிய பல செய்திகளைத் திரட்டி அவற்றை முன்னுரை என்ற பகுதியில் வெளியிடுவார். இவையேயன்றிப் பாடினோர் பாடப்பட்டோர் வரலாறுகளைத் தனித்தனித் தலைப்புகளில் எழுதி வெளியிடுவார். இத்திரட்டுப் பணிகளும் ஒரு வகையில்  ‘ஓராய்வு’, ‘சிற்றாராய்ச்சி’, என்பனவற்றுள் அடங்குமேனும் ‘நூல் கற்க ஆர்வத்தைத் தூண்டும் பகுதி’ யாகிய முன்னுரையிலேயே அவற்றை அடக்கினார்.

இத்தகையதொரு பதிப்பு நுணுக்கத்தையே தமிழறிஞர் கா.ம. வேங்கடராமையாவும் பின்பற்றினார். நால்வர் பெருமக்கள் வரலாற்றையும் அவர்கள் உள்ளிட்ட திருமுறை ஆசிரியர்கள் வரலாற்றையும் அவ்வப்பதிப்புகளில் சேர்த்தார். 1972-இல் வெளிவந்த பதிப்புகள் வரை அவை அவ்வப் பதிப்புகளுடன் அமைந்திருந்தன. காசிமடத்தின் பன்னிரு திருமுறைப் பதிப்பு நிதியின் கீழ் வெளிவந்த 25 பதிப்புக்கள் வரை இவை இருந்தன.

பதினோராம் திருமுறைப் பதிப்பில் வரலாற்று முன்னுரை குறிப்பிடத்தக்கதாகும்.  ‘வரலாற்று முன்னுரை’ யில் திருமுகப் பாசுரம் அருளிய இறையனார் வரலாறு எழுத ஒண்ணாதது ஆகையால் திருமுகப்பாசுரம் என்றே தலைப்பிட்டார். எஞ்சிய பகுதிகளுக்கு ஆசிரியர் வரலாறு எழுதினார். காரைக்காலம்மையார் பற்றிக் குறிப்பிடுகையில் "நஞ்சன்கூடு நஞ்சுண்டேசுவரர் கோயிலுள் அறுபத்து மூவர் விக்கிரகங்களின் கீழ் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களில்  ‘பூதவதி’ என்று எழுதியிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐயடிகள் காடவர்கோன் பற்றிக் குறிப்பிடுகையில் ’பகை மிகை ஒழிக்கும் வகை அடக்கினார்’ என்றமையால் முதலாம் விக்கிரமாதித்தனைப் பெரவள நல்லூர்ப் போரில் முறியடித்தவர் என்றும் ஊகித்தறியலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகு வரலாற்றுக் குறிப்புகள் இவர்தம் எழுத்துகளில் பரவலாக இருக்கக் காணலாம்.

திருக்குறள் உரைக்கொத்துப்-பதிப்புக்கள்

 காசிமடத்தின் மிகுபுகழ்பெற்ற பதிப்புகளில் திருக்குறள் உரைக்கொத்துப் பதிப்பு முதலிடம் பெறுவதாகும். இதற்கு முன்னர் ஒப்புமைப் பகுதிகளுடன் ‘திருக்குறள் உரைவளம்’ தருமையாதீனத்தவரால் வெளியிடப்பெற்றது. அதனினும் இது பல மாற்றங்களுடன் கூடியது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக்கொத்து ஆகிய இரண்டுமே திருக்குறள் ஆய்வாளர்களுக்கு மிகவும் தேவையானவை, பயன் தருபவை.

மணக்குடவர் உரையைத் திருத்தியும் மாற்றியும் கூற்று முதலியன சேர்த்தும் ஆங்காங்கு விளக்கவுரையுடன் விளங்குவது பரிப்பெருமாள் உரை. காசிமடத்தின் இப்பதிப்பில் மணக்குடவர் உரை உள்ளவாறே பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

பரிப்பெருமாள் மாற்றியமைத்த பகுதிகள் எல்லாம் அடிக்குறிப்பில் காட்டப்பெற்றுள்ளன. அடிக்குறிப்புகளில் கண்ட மாறுதல்களோடு சேர்த்துப் படித்தால் மணக்குடவரின் உரை, பரிப்பெருமாள் உரையாகும்.

 இதனால் பக்கங்களின் அளவு குறைந்ததுடன் மணக்குடவரின் உரைக்குச் சற்று மாறுதல்கள் உள்ளதே பரிப்பெருமாள் உரை என்பதும், பரிப்பெருமாள் தனியோருரை செய்தவரல்லர் என்பதும் பெறப்பட்டது. சங்கர நமச்சிவாயரின் நன்னூல் உரையில் சிவஞான முனிவர் செய்த பணிகளைப்போல மணக்குடவர் உரையில் பரிப்பெருமாள் செய்தார் என்று கொள்ளலாம்.

"இப்பதிப்பில் உரையாசிரியர்களின் முறைவைப்பு, பிறைக்குறியில் காட்டப் பெற்றுள்ளன."

இப்பொழுது நாம் பரிமேலழகரின் முறைவைப்பையே பின்பற்றுகிறோம். ஆனால் திருக்குறளுக்கு முதலில் உரை செய்த பரிதியாரின் முறை வைப்பு வேறு. காலிங்கர் முறை வைப்பு, மணக்குடவர் முறை வைப்பு ஆகியனவும் வேறுபடுகின்றன. மணக்குடவரின் முறைவைப்பே பரிப் பெருமாளின் முறை வைப்பாகவும் அமைந்தது. இவ்வுரைக் கொத்துள் ஒரு குறளுக்குக் கீழே பலர் உரையும் இருக்கும். அத்துடன் அவர்கள் அந்த அதிகாரத்தில் அந்தக் குறளை எந்த எண்ணுள்ள குறளாகக் கொண்டார்கள் என்பதும் இருக்கும். சான்றாக,

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

என்ற குறளைப் பரிமேலழகர் இறுதிக் குறளாகக் கொண்டார். மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் அதனை இறுதிக் குறளாகக் கொள்ளவில்லை.

புலத்தில் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து

  என்ற ஊடலுவகைக் குறளையே இறுதிக் குறளாகக் கொண்டுள்ளனர். அகரத்தில் தொடங்கும் முதற்குறள் கொண்ட நூலுக்கு னகரத்தில் முடியும் குறளை நிறைவுக் குறளாக வைத்தமையால் பரிமேலழகரின் முறைவைப்பே நிலைபேறுடையதாக ஆயிற்று.

திருக்குறள் காமத்துப்பாலைப் பரிமேலழகர் மட்டுமே  ‘களவு கற்பு’ எனத் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற் கேற்பப் பகுத்தார். 7அதிகாரம் ஆண்பாற் கூற்று; 12 அதிகாரம் பெண்பாற்கூற்று; 6 அதிகாரம் இருபாற்கூற்று எனக் காலிங்கர் பகுத்தார். அருமையில் கூடல், நலம் புனைந்துரைத்தல் முதலிய வகைமைகளில் மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோர் பகுத்தனர். இச்செய்திகளை எல்லாம் திருக்குறள் உரைக்கொத்தால் உணரலாம்.

இதன் காமத்துப்பால் பதிப்புரையில் கா.ம.வே.  ‘இயற்றமிழ்ப் புலவர்கள் போலத் தலைவியின் உறுப்புகளை ஒரிரண்டிடங்களில் வள்ளுவனார் வருணித்திருப்பினும் இடக்கர்ச் சொற்களைப் பெய்தாரிலர்’ எனக் குறிப்பிட்டிருப்பதைத் திருக்குறளின் பெருமைகளைச் சொல்லும் போதெல்லாம் சொல்லவேண்டும்.

  திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்குங்கால் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், எம். ஆர். இராசகோபால ஐயங்கார், வ.வே.சு. ஐயர், ரெவரண்ட் லாஜரஸ் ஆகியோரின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தக்க மொழிபெயர்ப்பைத் தெரிவு செய்து ஒவ்வொரு குறட்பாவுக்குக் கீழும் வெளியிட்டார். அதன் காரணத்தைக் கீழ்வருமாறு அவரே குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில மொழி பெயர்ப்புகளை அறிமுகம் செய்யவும்,
அம்மொழிபெயர்ப்பு நூல்களைப் பெற்று ஆங்கில
மொழிபெயர்ப்பு வளத்தை ஆராய்ந்து அறியவும்,
இவ்வாங்கிலத் தொகுப்புப் பெரிதும் பயன்படும்

என்பது அவர் கருத்து. 1972-க்குப் பிறகு வந்த பதிப்புகளில் இம்மொழி பெயர்ப்பு இல்லை.

கட்டுரை நூல்கள்

 இலக்கியக் கேணி, சோழர்கால அரசியல் தலைவர்கள், கல்லெழுத்துக்களில், ஆய்வுப்பேழை, கல்லெழுத்துக்களில் தேவார மூவர் முதலிய பல கட்டுரை நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

இலக்கியக்கேணி பல்வேறு காலங்களில் எழுதிய இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகள் அடங்கிய நூலாகும். 14 கட்டுரைகள் கொண்டது.

 சோழர்களின் அரசியலின் அமைச்சர்களாகப், படைத்தலைவர்களாக, மற்ற மற்றத் துறைகளின் அதிகாரிகளாக விளங்கிய அருணிதிகலியன், அம்பலவன் பழுவூர் நக்கன், சிற்றிங்கணுடையான், பார்த்திவேந்திராதிபன்மன், மதுராந்தகன் கண்டராதித்தன், பொய்கைநாடு கிழவன், ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராசன், கருணாகரத் தொண்டைமான், நெற்குன்றூர்க் கிழார், மணவில்கூத்தன், சேக்கிழார் அமராபரணன் சீயகங்கன், பெருமாள்நம்பிப் பல்லவராயன், மணவாளப்பெருமாள் ஆகிய பதினான்கு பேர்களின் வரலாற்றுகளைத் தக்க சான்றுகளுடன் கூறும் நூல் சோழர்கால அரசியல் தலைவர்கள் என்னும் நூலாகும்.

  நன்னூல் தோன்றக் காரணமான சீயகங்கன் மைசூர்ப்பகுதி கோலார் (குவளாலபுரம்) ஐத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் குலோத்துங்கனின் அதிகாரியாக இருந்து ஆட்சி புரிந்தவன் என்பதும், அவன் இயற்பெயர் திருவேகம்பமுடையான் என்பதும், அவன் மனைவி பெயர் அரிய பிள்ளை என்பதும் போன்ற நூற்றுக்கணக்கான புதிய தகவல்கள் இந்நூலுள் கல்வெட்டாதாரங்களுடன் உள்ளன.

கல்லெழுத்துக்களில் என்னும் நூலில் கூத்து, இசை, நாடகம், நாட்டியம் முதலிய கலைகள் மூவேந்தர் காலங்களில் எவ்வெவ்வாறெல்லாம் சிறந்து விளங்கின எனக் கல்வெட்டாதாரங்களுடன் தெளிவாக்கப் பெற்றுள்ளன.

 காஞ்சிக் கடிகை, எத்துநூல் எண்பதுலட்சம், கல்லெழுத்துக்களில் கங்காபுரியினர், மனுசரிதக் கல்லெழுத்து, முதலாம் விக்ரமாதித்தனின் கத்வல் பட்டயங்கள், இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடுகள், நிருபதுங்கவர்மனின் பாகூர்ச் செப்பேடுகள், தந்தி சக்தி விடங்கியார், இசைஞானியார், இருவில்லிகள், எண்ணலங்காரம், தொனி, தோட்டிமையுடைய தொண்டர், நெல்வாயில் அரத்துறை, வாரணவாசி, கண்காள் காண்மின்களோ, கல்வெட்டுக்களும் இசையும், இரண்டாம் இராசராசனது திருவொற்றியூர்க் கல்லெழுத்து ஆகிய 18 கட்டுரைகளைக் கொண்டது ஆய்வுப்பேழை என்ற நூலாகும். முன்பெவரும் எழுதாத செய்திகள் பெரும்பாலும் உள்ள கட்டுரைகளே இவர்தம் கட்டுரை நூல்களில் இருக்கும் என்பதை இந்நூலும் நன்கு மெய்ப்பித்தது.

 கல்லெழுத்துக்களில் தேவார மூவர் என்னும் நூல் பல பதிப்புகள் கண்ட நூலாகும். மக்கட் பெயர்களாகத் தேவாரச் சொற்கள் பல வழங்கியமை, மூவர் பெருமக்களை மக்கள் வழிபட்ட வரலாறுகள் முதலிய பல்வேறு செய்திகள் கல்வெட்டாதாரங்களுடன் கூறப்பெற்ற நூல் இது. ஆச்சாள்புரக் கல்வெட்டிலிருந்து ஞானசம்பந்தரின் மனைவி பெயர்  ‘சொக்கியார்’ என்று கண்டெழுதியுள்ளார். கோளறுபதிகத்தை ஞானசம்பந்தர்  ‘ஆணைநமதேர்’ என நிறைவு செய்தார்.

‘முத்திப் பகவன் முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தர்எதிர் ஆணை நமதென்ன வல்லான்’ என்பது நம்பியாண்டார் நம்பிகள் வாக்கு.

திருமையம் வட்டம் விராச்சிலைக் கல்வெட்டில்  ‘ஆணைநமதென்ற பெருமாள்’  என ஒருவர் பெயர் வருகிறது.

ஞானசம்பந்தரிடம் பக்தி பூண்ட ஒருவர் ஞானசம்பந்தர் எனத்தன் மகனுக்குப் பெயர் வைக்க எண்ணி அப்படிப் பெயர் வைத்து அழைப்பது மரியாதையாகாது எனக்கருதி ஆணை நமதென்ற பெருமாள் எனப் பெயரிட்டிருக்க வேண்டும். தேவாரத்தில் எவ்வளவு தோய்வு அக்காலத்தில் இருந்தது என்பதற்கு இத்தகைய பல சான்றுகள் உண்டு. அரிய புதிய ஆதாரச் செய்திகளின் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகப் பணிபுரிந்த காலங்களில் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் திருக்குறளும், பெரிய புராணமும் முதுமொழிமேல் வைப்பு நூல்களும், பெரிய புராணமும் முதுமொழிமேல் வைப்பு நூல்களும் திருத்தொண்டர் புராணத்தில் திருக்குறள் என்ற முப்பெரும் ஆய்வு நூல்களைச் செய்தார். இவை அச்சில் வரவில்லை.

  ‘திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும்’ என்னும் நூலைப் பதிப்புக்காகச் செப்பனிட்டார். திருக்குறள் உரைக்கொத்து பதிப்பித்தபோது பரிப்பெருமாள் உரை ஒலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. பின்னர் அவை கிடைக்கப் பெற்றன. அவ்வகையில் அதன் பயனால் ஏற்பட்ட மாற்றங்கள் இப்பதிப்பில் உள்ளன. இதை வெளியிடும்போது தமிழறிஞர் கா.ம. வேங்கடராமையா அங்குப் பணியாற்றவில்லை. இவரிடம் முன்னுரை பெற்று வெளியிட்டிருந்தால் முன்னைய பதிப்புகளினின்றும் என்னென்ன வேறுபாடுகள், என்னென்ன காரணங்களால் எய்தின எனப் பட்டியலிட்டிருப்பார். இதனால் நூலின் பதிப்புப்பணி செய்தோரிடமிருந்து பதிப்புரை அல்லது முன்னுரை பெறுதல் இன்றியமையாததாகும் என்பதை உணரலாம்.

திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்
மூன்று தொகுதிகள்

வடலூர் திருவருட்பிரகாச வள்ளலாரின் இலக்கியங்களில் தோய்ந்து நுண்ணாய்வு செய்து மூன்று நூல்களைக் கா.ம. வேங்கடராமையா வெளியிட்டார்.

‘திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்’ என்னும் பொதுத் தலைப்பில் முதலாவதாகத் திருவருட்பா மூன்றாம் திருமுறை, இரண்டாவது நூல் விண்ணப்பக் கலிவெண்பா என்னும் செஞ்சொற் பாமலரைப் பற்றி ஆய்ந்தெழுதி 1990-இல் வெளியிட்டார்.

அதே ஆண்டு திருவருள் முறையீடு பற்றி ஆய்ந்தெழுதி வெளியிட்டார். அதே ஆண்டு திருவடிப் புகழ்ச்சி பற்றி ஆய்வு செய்து நூலெழுதி வெளியிட்டார்.

இந்நூல்கள் சாத்திரச் செய்திகளும் ஞானநூற் செய்திகளும் நிறைந்தவை. விளக்கம் பெறாத பல சொற்களுக்கு விளக்கம் தருபவை.

தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு

ஞானசம்பந்தர் தேவாரத் திரட்டு, திருநாவுக்கரசர் தேவாரத் திரட்டு, சுந்தரர் தேவாரத் திரட்டு, சிவனருள் திரட்டு, நீத்தார் விண்ணப்பம், நால்வர் வரலாறும் திருமுறைப் பாடல்களும், திருவருட்பாத் திரட்டு முதலிய தொகுப்புகளைத் தென்னாப்பிரிக்கத் தமிழ்களுக்காக நெட்டால் தமிழ் வைதிக சபை வெளியீடாக வெளியிட்டமையை இவரின் கடல் கடந்த தமிழ்த் தொண்டு எனக் கூறலாம்.

தமிழில் பதிகங்களும், அதனுடன் அதன் ஆங்கில ஒலிபெயர்ப்பும், அதனைத் தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பும் அப்பதிப்புகளில் உள்ளன. நூன்முகப்பில் நாயன்மார்கள் வரலாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.

இவர்தம் மொழி பெயர்ப்புகள் வெளிநாட்டவர்க்குப் பெரிதும் பயன்படுவன என்பது சொல்லாமலேயே விளங்கும். மொழிபெயர்ப்பே செய்த பிறகு ஆங்கில ஒலிபெயர்ப்பு எதற்காக? என்ற வினாவுக்கு இவர் கூறிய விடை வருமாறு:

 "ஒலிபெயர்ப்பு என்பது ஆங்கில எழுத்துக்களில் இருக்கும். அவற்றைக் கூட்டிப் படிக்கும் போது தமிழ் உச்சரிப்புக்களே பிறக்கும். எந்த நாட்டுக்காரர் ஆயினும் மூல மொழியிலேயே மேற்கோள் சொல்ல வாய்ப்பு இருக்குமானால் அதைத்தான் விரும்புவார்கள். தமிழ் பேசுவதையே மறந்துபோகும் தமிழர்களும் தமிழ் உச்சரிப்பில் தெளிவுபெற இது ஒரு வழியாகும். மொழி பெயர்ப்புகள் நூற்றுக்கு நூறு என்னும் அளவுக்கு மூலத்தின் சுவை உணர்ச்சி நயம் முதலியவற்றைக் கொடுத்துவிட முடியாது. தமிழ் படிக்கத் தெரியாமல் தமிழறிந்தவர்கள் இருந்தால் அவர்கள் மொழிபெயர்ப்பினால் பெறும் நன்மையைக் காட்டிலும் ஒலிபெயர்ப்பினால் சற்றுக் கூடுதலாக நன்மை பெறலாமல்லவா?"

 அந்த அவருடைய வேட்கை, தென்னாப்பிரிக்காவில் பலன் கொடுத்துக் கொண்டுதான் உள்ளது. தென்னாப்பிரிக்காவில் நெட்டால் தமிழ் வைதிக சபையைச் சார்ந்தவர்கள் இல்லங்களில் இறப்பு நேர்ந்தால் நீத்தார் வழிபாடு நூலில் உள்ள சிவபுராணம் ஒலிபெயர்ப்பைக் குழுவாகச் சேர்ந்து படிக்கும் பழக்கம் விரிவடைந்து வருகிறது.

  ‘எளிய முறையில் தமிழ்’ என்ற இவருடைய நூல் ஆங்கிலம் அறிந்தவர்கள் தமிழ் மொழியில் எழுதத் தமிழ் பேச வழி செய்வதாகும். இந்நூலை இயற்ற இவரின் பெயரர் கா.ம. கோபிநாதன் பெரிதும் துணைசெய்தார். மொத்தத்தில் தென்னாப்பிரிக்க மக்களிடம் தமிழ் பரப்பவும், அவர்களுக்காக இந்நூல்களை வெளியிடவும், இவர்தம் மூத்த மகனார் நினைவில் வாழும் தமிழ்ப்புலவர் கா.ம. கிருஷ்ண மூர்த்தி காரணராக அமைந்தார்.

ஆங்கில நூற்பதிப்புகள்

 சைவ சமய அடியவர் அறுபத்துமூவர் வரலாற்றையும் ஆங்கிலம் அறிந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எளிய நடையில் சுருக்கமாக The story of Saiva saints  என்ற நூலை ஆக்கி வெளியிட்டார். அதிலுள்ள நால்வர் வரலாற்றை விரிவாக எழுதித் தனிநூலாகவும் வெளியிட்டார்.

திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியில் கழகத்தில் ஆய்வாளராகப் பணிஏற்றுத் தமிழகக் கையேடு  (The Hand book of Tamil Nadu)    என்ற விரிவான பெருநூலை ஆக்கிப் பதிப்பித்தார். இது சுற்றுலாத்துறைச் செய்திகளடங்கிய நூலன்று. உலக ஆய்வறிஞர்கட்குத் தமிழகத்தின் ஆய்வுக்களங்களை முழுமையாகச் சுட்டிக்காட்டும் பெருநூலாகும். வரலாற்றுக் காலத் தொடக்கம் முதல் சென்ற நூற்றாண்டின் இறுதிவரை வரலாற்றுக் குறிப்புகள், நூல்கள், தலங்கள், சமய சமுதாய நிறுவனங்கள், கலை பண்பாடு ஆகிய அனைத்தும் இந்நூலுள் இனங்காட்டப் பெற்றுள்ளன. இந்நூல் இயற்றுவதற்காக நூற்றுக்கணக்கானவர்களிடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டார்கள். தள்ளாத வயதில் தமிழகம் முழுவதும் பலநூறு ஊர்களுக்குப் பன்முறை பயணம் செய்தார்.

டாக்டர் உ.வே.சா. ஒலைச்சுவடிகளைத் தேடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்குச் சற்றொப்ப அமைந்த முயற்சி என இதனைக் குறிப்பிடலாம். அமெரிக்க டாலர் 100 என்ற விலைமதிப்புடைய இந்நூல் தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டு வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்தது. வெளியீட்டின்போது இப்பெருமகனார் உயிருடன் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழிலும் இந்நூல் வெளிவந்து பயன்தரவேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது.

தொல்காப்பிய மூலம்-பாடவேறுபாடுகள்
ஆழ்நோக்காய்வு

இவர் அமரரான பிறகு வெளிவந்த நூல்களின் இதுவும் ஒன்றாகும். இது பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தின் வெளியீடுகளில் ஒன்றாகும்.

இந்நூலில் இவரின் பங்களிப்புப் பற்றிப் பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தின் இயக்குநர் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

  "பன்னாட்டுத் திராவிட இயல் நிறுவனம் தொல்காப்பியப் பாடவேறுபாடுகளைத் தொகுப்பதற்காக முனைவர் ச.வே.சுப்பிரமணியத்திற்குத் தகைமை ஒன்றை ஈராண்டு வழங்கியது. தமிழ்நாட்டின் சுவடி நூலகங்கள் பலவற்றிற்கும் அவர் சென்று சுவடிகளின் விரவங்களைக் குறித்ததுடன், சென்னை டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒரிரு மாதங்கள் மயிலம் பேரா. வே. சிவசுப்பிரமணியத்தின் உதவியுடன் பாட பேதங்களைத் திரட்டினார். அவரைத் தொடர்ந்து பேரா.கே. எம் வேங்கடராமையா, திரு. ச.வே.சு. தொகுத்த பல செய்திகளை முறைப்படுத்தியும், புதியன திரட்டியும், விரிவாக்கியும், பல நிறுவனங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தும் மூன்று அதிகாரங்களையும் செம்மைப்படுத்தினார்."

இப்பணிமட்டுமன்றித்  ‘தந்துரை’ என்ற பெயரில் பாடவேறுபாடுகள் தோன்றக் காரணம், எஸ்.எம். கத்ரேயின் கருத்து, பாடவேறுபாடுகளைக் காட்டிய முன்னோடிகள், தொல், பாட வேறுபாடுகள் வெ.ப.பகுப்பு முறை (வெ.ப.=வெ.பழனியப்பன்). இப்பதிப்பில் மேற்கொண்ட முறை, இலக்கணச் சிந்தனைகள் (1. நின்-இசின், 2. சந்தி சேர்த்தெழுதுதல்) ஏமுனிவ்விருமையும், அர், ஆர், இர், ஈர், ஒடு, ஓடு, அகரச்சுட்டு, அன்றி எனத்திரிதல், லகரவீற்றுப் புணர்ச்சி, நூற்பா நிரலுள் காணப்பெறும் சில மாற்றங்கள், விட்டிசைத்தல், சில மாறாட்டங்கள், வீரசோழியத் தாக்கம், வாக்கியபேதம், தொல்காப்பியரின் அசைக்கோட்பாடு ஆகிய உள்தலைப்புகளில் பல்வேறு ஆய்வுச் செய்திகளை வழங்கியுள்ளார்.

இந்நூல் கே.எம். வேங்கடராமையா, ச.வே. சுப்பிரமணியன், ப.வெ. நாகராசன் ஆகியோரின் கூட்டுப் பதிப்பாக 1996-இல் வெளிவந்தது.

திருக்குறள் ஜைனர் உரை

திருக்குறளுக்குச் சைன பரமான ஓர் உரை உண்டு. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தினர் வேண்டுகோளின்படி அதன் பதிப்பாசிரியராக இருந்து அந்நூலைக் கா.ம. வேங்கடராமையா வெளியிட்டார். அவ்வெளியீட்டுக்காக ஜைனப் பெரியவர்கள் பலரிடமும் சென்று அச்சமயச் செய்திகளை நன்கறிந்தார். அவ்வகைக்கு, திரு. ஸ்ரீபால் மிகவும் உதவினார். பல்வேறு பதிப்புகளையும் ஒப்பு நோக்குதல் முதலியன செய்து தேவையான வகையில் செப்பனிட்டு விரிவான ஆராய்ச்சி முன்னுரை எழுதித் திருத்தமான முறையில் அந்நூலைப் பதிப்பித்தார்.

 வைதீக நெறியிலும் சைவ நன்னெறியிலும் ஆழங்காற்பட்ட சிவநெறிச் செல்வர், சைனர் உரையைப் பதிப்பித்ததை அறிந்து பலரும் வியந்தனர். திருக்குறளை எச்சமயத்தினரும் தத்தம் நூலாகக் கொண்டாடுவதை அவர் பெரிதும் விரும்பினார். வைதிக சமயத்தவராகிய டாக்டர் உ.வே.சா அவர்கள் முதன்முதலாகச் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்தார். வாணாளின் இறுதிப் பதிப்பாகவும் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார். தமிழ்நூற் பதிப்பார்வத்தின் முன்னே சமயம் ஒரு பொருட்டாகாது.

எந்தச் சமய நூலைப் பதிப்பிக்கிறோமோ அந்தச் சமய அறிவை முற்றிலுமாகப் பெற்று, அச்சமயத்தவராகவே தம்மை வரித்துக் கொண்டு பதிப்புப்பணி செய்வதே நனிநாகரிகம் ஆகும். அந்த நனிநாகரிகம் மேற்காண் இருவரிடமும் நன்கிருந்தது.

1930-இல் அனந்தநயினார் எழுதி வெளியிட்ட ‘திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன சமய சித்தாந்த விளக்கமும்’ என்னும் நூல் திருக்குறள் ஜைனர் உரைப் பதிப்பிற்குப் பெரிதும் பயன்பட்டது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியதும் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியன் அழைப்பின்பேரில் முதல் பேராசிரியராகப் பொறுப்பேற்றுச் சுவடிப்புலத் தலைவராக இருந்து ஐம்பெரும் நூல்களை இயற்றிப் பதிப்பித்தார். தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு என்பன அவை.

போன்ஸ்லே வம்ச சரித்திரம், மெக்கன்சி சுவடிகள். மோடி ஆவணங்கள் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து இவ்விரு பெரு நூல்களை வெளியிட்டார். இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, வரலாற்றுப் புலமையும் ஆங்கிலம் சமஸ்கிருதம் தெலுங்கு மொழிப் புலமையும் அறிவும் இப்புதிய பெரிய வரலாற்று நூல்கள் படைக்க இவருக்கு உதவின. தகுந்த ஆதாரம் இன்றி எக்கருத்தையும் வெளியிடமாட்டார். என்னும் இவரின் தன்மையை இந்நூல்களைக் கற்போர் எளிதில் உணரமுடியும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் நினைவில் வாழும் தமிழறிஞர் கா.ம. வேங்கடராமையாவின் திறனை நாடறிய, நிலைக்களனாக அமைந்தது என்பதை நன்றி நிறைந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வது இன்றியமையாததாகும்.

மேலும் சில

திருக்குறள் குறிப்புரை, திருக்குறள் அறத்துப்பால் பொழிப்புரை ஆகிய நூல்களையும் (குறிப்புரை, பொழிப்புரை செய்து) 1950-களில் இவர் வெளியிட்டார்.

இவர் தமிழ்க் கவிதைகள் புனைவதிலும் ஆற்றல் பெற்றிருந்தார். ஸ்ரீ அருணந்தி அடிகள் போற்றித் திருவகவல், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் திருமரபுத் திருத்தொகை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் சுப்பையா பிள்ளை பேரில் வண்ணக ஒத்தாழிசை முதலியன இவர்தம் கவிதைப் படைப்புகள் ஆகும்.

தெலுங்கு மொழியில் உள்ள பழம்பெரும் கதைகளை மொழிபெயர்த்து இதழ்களில் வெளியிட்டார். அவற்றில் ‘பண்டித பரீட்சை’ என்னும் கதை குறிப்பிடத்தகுந்ததாகும்.

மலர்களிலும், கலைமகள் உள்ளிட்ட இதழ்களிலும் வெளியிட்ட பல கட்டுரைகளும், தமிழ் சமஸ்கிருதம் பிற இந்திய மொழி ஆய்வு நிறுவனத்தில் எழுதிய பன்மொழி இலக்கண ஆய்வு நூல்களும் வெளியிடப் பெறாதவைகளாகவே உள்ளன.

குமரகுருபரன், ஸ்ரீகுமரகுருபரர் ஆகிய சமய இலக்கியத் திங்களிதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்து அப்பதிப்புகள் சிறப்புற வெளிவரப் பெரும்பங்காற்றினார்.

தமிழகத்திலும், பல வெளி மாநிலங்களிலும் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றினார். இவற்றுள் வெண்பா மாநாட்டுத் தலைமையுரை நூலாக வெளிவந்துள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டியவை

ஈடுபாடு என்பது பதிப்பாசிரியருக்கு இருக்க வேண்டிய முதற் குணமாகும். ஒப்புநோக்கல் என்பதை எந்த அளவுக்கு விரிவாகச் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு விரிவாகச் செய்வதில் சலிப்படையாமை மேலும் வேண்டத்தக்க பண்பாகும்.

 பாடபேதங்களில் மிகப் பொருத்தமானது இது எனத் தெரிவு செய்து வெளியிடும் திறன் இன்றியமையாததாகும். அடிக்குறிப்பில் காணும் பாடபேதங்களை மூலத்துடன் ஒட்டிப் பொருள் கண்டு எது சுவையானது? எது சரியானது? மூலநூலாசிரியனின் போக்குப்படி எது இருந்திருக்க வேண்டும்? எனச் சிந்தித்துப் பார்க்கும் பழக்கம் குன்றி வருவதால் பதிப்பாசிரியரின் பொறுப்புக் கூடிவிடுகிறது.

படைத்துப் பதிப்புச் செய்யும்போது நம்பிக்கையான தரமான ஒருவருக்குப் படித்துக்காட்டித் திறந்த மனத்துடன் அறிவுரைகளை ஏற்றுப் பின்னர் அச்சுக்கு வழங்குவது சாலச்சிறந்ததாகும்.

 இவை யாவற்றையும்விட வெளியீட்டின் நற்பெயர், மெய்ப்பு ஒப்புநோக்கும் பணியில்தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. மெய்ப்பு ஒப்பு நோக்குதலில் கவனக் குறைவு ஏற்பட்டால் அதுவரை உழைத்த உழைப்பு அத்தனையும் பாழ்பட்டுப் போகும். கா.ம. வேங்கட ராமையாவுக்கு மெய்ப்பு ஒப்புநோக்கல்-அச்சுப் பிழைதிருத்துதல் என்பது அனிச்சைச் செயல் போலவே அமைந்திருந்தது. வெளிவந்த நூல்கள் அவருக்கு வழங்கப்பட்டால் எழுதுகோல் எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்குவார். படித்துக் கொண்டே பிழைதிருத்தம் செய்வார். அவர் படித்த நூல்களில் அவர் திருத்தம் செய்யாத நூலே இல்லை எனலாம்.

தாமதமானாலும் தரம் காக்க வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு வல்லவர்களை அணுகிச் செய்திகள் திரட்டிச் சொல்லப்பட்டவைகள் சரிதானா என்று,

ஒற்றொற்றித் தந்த பொருளை மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

என ஒற்றாய்தலுக்குச் சொன்ன அதே அணுகுமுறையில் உண்மைகளை முடிவு செய்து கொள்வதும் படைத்துப் பதிப்புச் செய்வோருக்கு மிக வேண்டும் கடமையாகும்.
  
நிறைவுரை

சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி முதலிய பல்வேறு பட்டங்களைப் பெற்ற கா.ம. வேங்கடராமையா நேரந் தவறாமை, நேரத்தை வீணாக்காமல் பலதுறை அறிவு நூல்களைக் கற்றல், ஐயம் என்று வந்தவர்க்குத் தாம் அறியாத செய்தியாயினும் அரிதின் முயன்றேனும் அறிந்து விடை கூறுதல் ஆகிய தகவுகள் கொண்டு விளங்கினார். அவர்தம் இத்தகு பண்பு நலன்களும் அவர்களின் பணிகள் சிறக்க உதவின.

ஈசனடி போற்றி! எந்தையடி போற்றி!

⏏⏏⏏