வாழ்க்கை வரலாறு


தமிழ் மாமணி
சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப்புலவர்,
செந்தமிழ்க் கலாநிதி வித்துவான்.
அமரர் கா.ம. வேங்கடராமையா அவர்களது வரலாற்றுச் சுருக்கம்

ஜி. நாராயணன், நங்கைநல்லூர்.
________________________________________

தொண்டை நாட்டில், செங்கற்பட்டு மாவட்டத்தில் சென்னைக்கருகிலுள்ள போரூருக்குப் பக்கத்தில் காரம்பாக்கம் என்ற சிற்றூரில் கிருஷ்ணய்யா-வெங்கடசுப்பம்மாள் என்ற தம்பதியர் வசித்து வந்தனர். பலதலைமுறைகட்கு முன் ஆந்திர நாட்டிலிருந்து குடிபெயர்ந்த வேகிநாடு என்ற பிரிவைச் சேர்ந்த அந்தணர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தனர். அவர்களுள் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் உண்டு. இங்கே குறித்த தம்பதிகள்  ‘மந்திரவாதி’ என்ற குடும்பப் பெயரை உடையவர்கள்.

பிறப்பு

கிருஷ்ணய்யருக்குச் சாத்திரப் படிப்போ உலகியற் கல்வியோ அதிகம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் ஸ்ரீராம நவமியன்று மட்டும் ஒரு வைணவரும் அவரது துணைவியாரும் இவரது இல்லத்திற்கு வருவது வழக்கம். அவர்களுக்குத் தக்க பணிவிடை செய்து அவர்களைக் கொண்டு பூஜை செய்விப்பார். அவர்கள் உணவு உட்கொண்டு களைப்பாறி மாலையில் புறப்படுவது வழக்கம். இவ்வாறு பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. அந்தப் பெரியவரிடம் கிருஷ்ணய்யா,

‘ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோபூயோ நமாம்யஹம்’

 என்ற சுலோகத்தை உபதேசமாகப் பெற்றுப் பல ஆண்டுகள் நாள்தோறும் இடைவிடாமல் உருவேற்றிவந்தார். அவர் துணைவியார் தமது கணவருக்கு இணங்க நடந்து வந்தார்.

இந்தத் தம்பதியருக்குப் பெண்கள் மூவரும் ஆண்கள் மூவருமாக மக்கள் அறுவர் பிறந்தனர். வரிசைப்படி நான்காவது மகனாகவும் ஆண்களில் முதல்வராகவும் 4.4.1911 அன்று (பங்குனி மாதம் உரோகிணி நட்சத்திரத்தில்) திரு.கா.ம. வேங்கடராமையா பிறந்தார்.

அந்தணர் முறைப்படிச் செய்ய வேண்டிய ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ராசனம், உபநயனம் ஆகிய வைதிகச் சடங்குகளைத் தந்தையார் செய்வித்தார். 1924-இல் சூலைமேனி துரைசாமி அய்யர் அவர்களின் மூத்த மகள் அன்னபூரணியைத் தம் மகனுக்குத் திருமணம் செய்வித்து இல்லற நெறியில் ஈடுபடுத்தினார்.

கல்வி

கா.ம.வே. பூவிருந்தவல்லி அரசினர் பள்ளியில் தமது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் இலயோலா கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) பட்டப் படிப்பில் சேர்ந்து சிறந்த முறையில் தேறினார். அதற்குப் பிறகு, தமிழ் மீதிருந்த ஆராக்காதலால் தமிழ் வித்துவான் படிப்பையும் எம்.ஏ. (தமிழ்) பட்டத்தையும் சிறப்பான முறையில் படித்துத் தேர்ந்தார். அதன் பிறகு பி.ஓ.எல்.  (BACHELAR OF ORIENTAL LANGUAGES)  என்னும் சிறப்புத் தேர்விலும் தேறிப் பட்டம் பெற்றார். அதன் பிறகு செங்கற்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வந்தார்.

திருப்புமுனை

இவ்வாறு தமிழ்ப்பணி புரிந்து வரும் காலத்தில் அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. இறைவனது திருவருளால் 1945-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார். இந்தப் பணியில் அவர் சேரும் பொழுது திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தில் தலைவராக இருந்தவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆவார். மடத்துத் தலைவரின் ஊக்கத்தாலும் அருளாசியாலும் கா.ம.வே. அவர்கள் ஆற்றிய ஆசிரியப் பணியும் தமிழ்ப் பணியும் மிகச் சிறப்பானவை. மடத்தின் தமிழ், சைவ நூல்களின் பதிப்புகளில் இவர்தம் பங்கும் பங்களிப்பும் அளவிடற் கரியன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் புலவர்களைத் தமிழகத்துக்கு உருவாக்கித் தந்தவர் இவர்.

இங்ஙனம் கல்லூரி முதல்வராக 28 ஆண்டுகள் சீரிய முறையில் பணியாற்றிய கா.ம.வே. பின்னர்ச் செட்டிநாட்டு அரசர் முத்தையவேள் நிறுவிய ’தமிழ் ஸம்ஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் ஆராய்ச்சி’ நிலையத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் (TIRUKKURAL CHAIR) ஆய்வாளராக மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடித் துறையின் தலைவராகச் சீரிய பணியாற்றினார்.

ஆக்கிய நூல்கள்

 இங்ஙனம் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் சிறப்பான பணிபுரிந்து வந்த கா.ம.வே. நூற்றுக்கணக்கான சமய, இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவருடைய தமிழ்ப் புலமையையும் ஆராய்ச்சி வல்லமையையும் உணர்த்தும் நூல்கள் வருமாறு:

1. இலக்கியக் கேணி-1961
2. சோழர் கால அரசியல் தலைவர்கள்-1963
3. கல்லெழுத்துக்களில்-1963
4. கல்வெட்டில் தேவார மூவர்
5. STORY OF SAIVA SAINTS
6. ஆய்வுப் பேழை
7. சிவன் அருள் திரட்டு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
8. நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
9. திருக்குறள் குறிப்புரை
10. தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
11. திருக்குறள் அறத்துப்பால் பொழிப்புரை
12. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு-மெக்கன்சி சுவடி ஆய்வு. 1985
13. திருக்குறள் பரிப்பெருமாள் உரை-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். 1993
14. திருக்குறள் சைனர் உரை-பதிப்பு, சரஸ்வதி மகால். 1994
15. விண்ணப்பக் கலிவெண்பா (வள்ளலார் ஆய்வு)
16. திருவருள் முறையீடு (வள்ளலார் ஆய்வு)
17. திருவடிப் புகழ்ச்சி (வள்ளலார் ஆய்வு)
18. A HAND BOOK OF TAMIL NADU (FIRST PART)  8-ஆவது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு.
19. தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ் நோக்காய்வு.

பெற்ற சிறப்புக்கள்

கா.ம.வே. அவர்கள் தாம் ஆற்றிய 50 ஆண்டுத் தமிழ்ப் பணிக்குப் பெற்ற சிறப்புக்களும், பட்டங்களும் பற்பல; அவற்றுள் கீழ்கண்டவை சிறப்பானவை.

1. சிவநெறிச் செல்வர் (மதுரையாதீனம்)
2. கல்வெட்டாராய்ச்சிப் புலவர் (காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்)
3. செந்தமிழ்க் கலாநிதி (தருமையாதீனம், தங்கப் பதக்கத்துடன்)
4. தமிழ் மாமணி (பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்)
5. ஸ்ரீ-ல-ஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அருளிய பண முடிப்புக்கள், பொன்னாடைகள், தங்கப்பதக்கம், பொன் மாலைகள்.
6. சைவத் தமிழ் ஞாயிறு-தஞ்சை அருள் நெறித் திருக் கூட்டம்.
 7. குருமகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ அருளிய பொன்னாடைகள்.
8. தருமை 26-ஆம் குருமகாசந்நிதானம் அருளிய தங்கப்பதக்கம்.
9. கயிலை மாமுனிவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் அருளிய பொன்னாடைகள், பொன் மோதிரம்.
10. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளிய பொன்னாடைகள், பொன் மோதிரம்.
11. கம்பன் கழகம்-பாராட்டும் பணமுடிப்பும்
12. தமிழகப் புலவர் குழு-முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. பாராட்டு

இறுதிக் காலம்

 கா.ம.வே. தமது இறுதிக்காலத்தில் சில ஆண்டுகள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் டாக்டர் வ.அய். சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் தமது ஆராய்ச்சிப் பணியைத் தொடர்ந்தார்.

இங்ஙனம் அல்லும் பகலும் அயராது தமிழ்ப் பணியில் ஈடுபட்ட கா.ம.வே. அவர்கள் 31-1-1994 அன்று தாம் இடையறாது வணங்கி வந்த சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார். இவர் துணைவியார் வாழ்வரசியாக 1-06-1982-இல் இறையடி அடைந்தார்.

 பிறப்பால் தெலுங்கராய் இருப்பினும், தமிழ்மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தமது பிள்ளைகளுக்கு வேறு உலகியல் உயர்கல்வி கற்பிக்கும் வாய்ப்பிருந்தும் தமிழ்க் கல்வியே உயர்கல்வி என்னும் உறுதியுடன் அவர்களைத் தமிழ்ப் புலவராக்கித் தமிழாசிரியராகப் பணிபுரியுமாறு செய்த ஒரே சான்றோர் கா.ம.வே. என்று உறுதியாகக் கூறலாம்.

 கா.ம.வே. அவர்கள் அயராது உழைப்பவர். பொன்போன்ற காலத்தை வீணாக்காதவர். மென்மையான தன்மை உடையவர். தாமறியாத பொருளைப் பற்றி யார் எது கேட்பினும் அதைப் பற்றித் தனக்குத் தெரியாது என்று கூறும் உறுதி படைத்தவர். நேர்மையும், தூய ஒழுக்கமும் இவர்தம் சிறப்பு இயல்புகள். நாளொன்றுக்குக் குறைந்தது 12 மணி நேரம் உழைத்தவர். நன்றியறிவுடைமையும் நாவடக்கமும் உடையவர். எல்லாப் பொழுதினும் மகாதேவ நாமத்தை இடையறாது ஓதி வந்தவர்.

அன்னார் ஆற்றிய பணிகளையும் தொண்டையும் நாம் நினைவு கூர்வதோடு நிற்காமல் அவருடைய வழியில் நாமும் செல்ல வேண்டும் என்னும் உறுதியைக் கைக்கொள்வோமாக.

செந்தமிழில் சைவத்தில் சீர்த்த அறிஞராய்
வந்த எங்கள் வேங்கடராமையாவைச்-சந்ததமும்
போற்றிப் புகழ்ந்து புரையற்ற தொண்டுபல
ஆற்றிப் பணிவோம் அமைந்து.

⏏⏏⏏