மாணவர்களின் நினைவுரைகள்



தன்னிடம் தமிழ்ப் பயின்றவர்கள் தெய்வத்தமிழ் இலக்கியங்களில்ஆய்வும்,தோய்வும் உடையவராக தன் மாணவர்களை ஒருவாக்கியவர் பேராசிரியர். கா. . வேங்கடராமையா அவர்கள். பழுத்த தமிழ்ப் புலமை பாலித்த அவர் மாணவர்களுள் சிலர் ஆற்றிய நினைவுரைகள் உங்கள் பார்வைக்கு இதோ.
___________________________________________________________________________
  1. புலவர் இராம. சுவாமிநாதன்
  2. புலவர் முத்து வாவாசி
  3. புலவர் . துரியானந்தம்
  4. புலவர் கவிக்கோ ஞானசெல்வன்
  5. புலவர் கு. பாண்டியமாலை
  6. புலவர் பனசை அருணா
  7. புலவர் மாகுமரன்
  8. புலவர் சி. பழனி
1. புலவர் இராமசுவாமிநாதன், கும்பகோணம்
இமைப்பொழுதும் என் நெஞ்சில் 
நீங்காதான் - தாள் போற்றி! 
மாதா - பிதா - குரு - தெய்வம் 
புலவர் இராமசுவாமிநாதன்கும்பகோணம்.

தந்தை மகற்கு ஆற்றும் செயல், கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோன் ஆகப் பெரும் பாடுபட வேண்டாமா?

கல்லூரிக்குக் கட்ட வேண்டிய சேர்க்கைக் கட்டணம் ரூபாய் 1, நூலகக் கட்டணம் ரூபாய் 2, விளையாட்டுக் கட்டணம் ரூபாய் 2, ஆக ரூபாய் 5/- அந்த ஐந்து ரூபாயும் தானே கட்டி என்னைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்த கல்வித் தந்தையும் திரு. கா.ம.வே அவர்கள்தான்.

அன்று முதல் 30-06-1995 வரை அப்பள்ளியிலேயே 28 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்றேன். 01-07-95 முதல் 31-05-1996 வரை 11 மாதங்கள் பணி நீட்டிப்பில் பணியாற்றியுள்ளேன். இவ்வாறு மதுரை மாவட்டத்தில் 8 ஆண்டுகள், திருவாருரில் 4 ஆண்டுகள், திருப்பனந்தாளில் 28 ஆண்டுகள் ஆக 40 ஆண்டுக்காலம் தமிழாசிரியராகப் பணியாற்றி இன்று பத்தாயிரம் ருபாய் ஒய்வு ஊதியமாகப் பெறும் தகுதியை எனக்கு அளித்த தெய்வத்தை இன்றும், என்றும் திசை நோக்கி வணங்குகிறேன்.
____________________________________________________________________________

2. புலவர் முத்து வாவாசி, சென்னை
என் உள்ளத்தில் என்றும் வாழும் முதல்வர்
பேராசிரியர் வேங்கடராமையா அவர்கள்
புலவர் முத்து வாவாசி
மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு உதவியாளர், சென்னை.

அவர் மாணவர்களிடம் கொண்டிருந்த அன்புக்கு ஒரு நிகழ்ச்சியை இங்கே கூறுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். அந்நாளில் 1970-ஆம் ஆண்டுவாக்கில் தமிழாசிரியர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படாமல் இருந்ததுடன், ஆசிரியர்களிடையே ஊதிய வேறுபாடுகளும் இருந்துவந்தன. பள்ளிகளில் ஒரே கல்வித் தகுதியைக் கொண்டிருந்த போதும், நியமனங்களில் தமிழாசிரியர்களிடையே இரு நிலைகள்; தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்களுக்குக் கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களைவிட மிகமிகக் குறைந்த ஊதியம். இந்த வேறுபாடுகளை நீக்கிட, தமிழாசிரியர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைத்திட, தமிழகம் முழுவதிலும் தமிழ்க் கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

மற்ற கல்லூரிகளிலெல்லாம் மாணவர்களால் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி மாணவர்கள்-நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் எனப் போராட்டம் நடத்தினோம். போராட்டம் மூன்று, நான்கு நாட்களைக் கடந்து ஐந்தாம் நாளும் நீடித்தது; மாணவர்கள் மயங்கிவிழத் தொடங்கினார்கள்; இதனையறிந்த முதல்வர் வேங்கடராமையா அவர்கள், (என்பிள்ளைகள் எல்லாம் உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருக்கும்போது, எனக்கு மட்டும் ஏன் உணவு?) என்று தம் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி, அவர்கள் வற்புறுத்தியும் கேளாமல் கண்ணீர் வடித்து, உணவு உட்கொள்ளாமல் மாணவர்கள் பட்ட துன்பத்தைத் தாமும் ஏற்றார்கள்.

ஐந்தாம் நாள்-ஒரு வழியாக எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் எனக் கூறியது. அதன் காரணமாக எங்கள் உண்ணாவிரதம் முடிவுக்கு வரும்நிலை ஏற்பட்டது. உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்காக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த முதல்வர் வேங்கடராமையா அவர்கள் எங்களைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சி இன்றும் என் மனக்கண்முன் நிழலாடுகிறது; அக்காட்சியைக் கண்ட அவ்வூர்ப் பொதுமக்கள், அவர் தமது மாணவர்களிடம் கொண்டிருந்த பற்றையும், பாசத்தையும் எண்ணிப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
____________________________________________________________________________

3. புலவர் துரியானந்தம், சென்னை
  எங்கள் முதல்வர் புலவர்
புலவர் க.துரியானந்தம் எம்.ஏ.பிலிட், பி.எட்.

மாணவர்களிடையே எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தார்கள். வார வழி பாட்டு மன்றம் தொடங்கி ஒவ்வொரு வியாழக் கிழமையும் கூட்டு வழிபாடு நடத்தியும் திரு முறைகள் ஓதச் செய்தும் மாணவர்களை ஏதேனும் ஒரு பொருள் பற்றிப் பேசச் செய்தும் மாணவர்களைச் சீரான வாழ்க்கைக்குத் தயார் செய்தார்கள். தன் மாணவர்களில் சிலரைப் பேராசிரியர்களாக்கி அவர்கள் சிறந்த முறையில் சொற் பொழிவுகள் செய்யவும் நூல்கள் வெளியிடவும் ஊக்குவித்தார்கள், அவர்களின் முன்னேற்றம் கண்டு மகிழ்ந்தார்கள்.

காலம் தவறாது கடமையாற்றுவதில் முன் மாதிரியாகத் திகழ்ந்தார்கள். திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தைச் சார்ந்த அத்தனைக் கல்வி நிறுவனங்களையும் தனியோரு மனிதராக இருந்து நிர்வாகம் செய்தார்கள். களங்கமோ குறையோ சொல்ல முடியாமல் மிக மிக நேர்மையான முறையில் நிர்வகித்தார்கள். இந்தக் காலத்தில் இதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும். ஆனால் அதுவே உண்மை. எத்தனையோ ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களுக்கு வாழ்வளித்துள்ளார்கள்.

விளம்பரம் இல்லாமல் பல உதவிகளை எத்தனையோ பேர்களுக்குச் செய்துள்ளார்கள். எங்கள் ஊரில் உயர் நிலைப் பள்ளிக்தொடங்குவதற்கு அரும்பாடு பட்டார்கள். அவர்கள் முயற்சி இல்லையேல் உயர்நிலைப் பள்ளி அக்காலத்தில் எங்கள் ஊருக்கு வந்திருக்காது.

மாணவர்களை மகன்கள் போலவும் மகன்களை மாணவர்கள் போலவும் நடத்தினார்கள். மிக மிக எளிய வாழ்வு வாழ்ந்தார் எங்கள் முதல்வர். அவர்கள் வீடு சங்க காலப் புலவர் வீடு போல் ஆடம்பரம் இல்லாமலும் அலங்காரப் பொருட்கள் இல்லாமலும் இருக்கும். அவர்கள் வீட்டுத் திண்ணையில் வந்து அமராத தமிழ் அறிஞர்களே இல்லை எனலாம். தூய எளிய கதராடையையே அணிவார்கள், அவர்களின் பரந்த நெற்றியில் எப்போதும் திருநீறு அணி செய்யும். எப்போதும் சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.
____________________________________________________________________________

4. புலவர் கவிக்கோ ஞானச்செல்வன், சென்னை
சிவநெறிச் செல்வரின் பன்முகப் பணிகள்
புலவர் கவிக் கோ ஞானச்செல்வன், எம்.ஏ., எம்.எட்.,

எப்போதும் முப்பிரிவாய்த் திருநீற்றின் ஒளிதிகழும் பரந்த நெற்றி அறிவாற்றலைப் புலப்படுத்தும்; கூர்மையான நெடிய மூக்குச் சிந்தனையின் கூர்மையை வெளிக்காட்டும்; அடர்ந்த புருவங்கள், அவற்றின் கீழ் ஒளி வீசும் கண்கள் கண்டிப்பையும், கருணையையும் ஒருங்கே புலப்படுத்தும்; நெடுஞ்செவிகள் நிரம்பக் கேட்கும் பண்பையும், விரியாத மென்முறுவல் தவழும் இதழ்கள் அதிகம் பேசாத அடக்கப் பண்பையும் அறிவிக்கும்.

  உயர்ந்த மனிதர், உருவத்தால் மட்டுமல்லர், உறுதியான நற்பணிகளாலும்; உள்ளம் போலவே வெள்ளை நிற, ஜிப்பா, வெண்ணிற வேட்டி என எளிமை எப்போதும் குடிகொண்ட தோற்றம், கைகளை வீசி நடக்கும் விரைந்த நடை - வீறுநடை; நேர்கொண்ட பார்வை, இந்த வருணனைக்கு உரியவர் மதிப்பு மிகு பேராசிரியர் கல்வெட்டாய்வறிஞர் கா.ம.வேங்கடராமையா அவர்கள்.
____________________________________________________________________________

5. புலவர் கு.பாண்டியமாலை, தாம்பரம்

கல்லூரி முதல்வருக்குக் கல்வெட்டின்
காவலருக்கு நூற்றாண்டு விழா!
புலவர் கு.பாண்டியமாலை, தாம்பரம்.

வற்றாத தமிழ் ஊற்று!
முற்றாத முளை நாற்று!
ஆன்மிகச் சுடரொளியாய்!
அழகு தமிழ்க் கடலலையாய்!
கானத்தே இருந்த புலி
கல்லூரி வந்தது போல்
ஏறு போல் பீடு நடை
ஏற்ற மிகு எளிய உடை
ஆற்றல் நிறை தமிழர் படை
நெற்றியிலே திரு நீறு
நெய்திட்ட நூலாடை
குப்பாய்த் தோற்றத்தில்
கொலுவிருக்கும் முதல்வர்

___________________________________________________________________________

6. பனசைஅருணா, சென்னை
 ஓர் இனிய நெஞ்சின் நினைவலைகள்...
பனசை அருணா


சுந்தரத் தெலுங்கே உன் தாய்மொழி யாகும்
மந்திரத் தமிழோ உன் வாய்மொழி யாகும்
சிந்தைக்கு விருந்தாய் - நா - செந்தமிழ் பேசும்
சந்தனத் தமிழே நீ சரித்திரம் ஆனாய்

காந்தம் ஆகி நீ எங்களை ஈர்த்தாய்
கன்னல் ஆகவே எங்களுக்கு இனித்தாய்
மின்னல் ஆகி நின் செயலும் பளிச்சிடும்
மன்னன் ஆக மனதில் வாழ்கிறாய்.
____________________________________________________________________________

7. மா.குமரன், தேவிகாபுரம்

பத்தும் கடந்தபண்பாளர்
மா.குமரன், தலைமையாசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி, தேவிகாபுரம்.

கடிதோச்சி மெல்ல எறியும் அன்னாரின் பணிவான தோற்றமும், நடையும் காண்போரை மட்டுமன்றி  கேட்போரையும் வணங்கச் செய்யும் சால்பு உடையது. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் பேரழகு முதலான ஆசிரியர்க்குரிய இலக்கணங்களான பத்தும் கடந்து நின்றவர் எங்களது பேராசிரியப் பெருந்தகையாவர்.

சந்தன விருட்சத்தை அண்டி நிற்கும் பல தருக்களும் அவ்வாசனை பெறுவதைப் போன்று எங்களையும் மணம் கமழச் செய்தவர். எளிமையான தோற்றம், அயராத உழைப்பு, மென்மையான தன்மை, பணிவுடைமை, இன்சொல் போன்ற உன்னத இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் கழ்ந்தவர் எங்களது பேராசிரியர் பெருந்தகையாவார்.
____________________________________________________________________________
                                                                                                                                                     
8. புலவர் சி.பழனி, தேவிகாபுரம்

 மாமனிதர்  எம்ஆசான்
புலவர்  சி.பழனி, எம்.ஏ.,எம்.எட்.,
உதவிதொடக்கக்கல்வி
அலுவலர் (பணிநிறைவு) தேவிகாபுரம்.

அவர்தம் நயன தீட்சையிலே மாணாக்கர் தம் அறியாமை அகலும். அவர்தம் ஸ்பரிச தீட்சையிலே மாணாக்கர் தம் பாவம் அகலும். அவர்தம் உபதேச தீட்சையிலே மாணாக்கர் உள்ளத்தே ஒளிபெற்று அட்ட ஐஸ்வர்யங்களையும் அடைவர்.

நன்றாகப் படிக்கும் மாணாக்கர்பால் அவர் பார்வை பதியாது. படிக்க இயலாத, புரியாத மாணவர்களைப் பக்குவமாகப் பக்கம் அழைத்துப் பேசிக் கல்விக்குத் தடையாய் உள்ள அவர்தம் சுகதுக்கங்களில் தானும் பங்கு கொண்டு கடை மாணாக்கர்களையும் கடைதேற்றும் பெருங்கருணையாளர். மொத்தத்தில் பதர் இல்லா விளைச்சல் காணும் பண்பாளர் எம் ஆசான்.

மரபுவழிபட்ட  ஆலயவழிபட்டு பேரிடுப்பாடு காட்டியவர் சிவநெறிசெல்வர் பேராசிரியர். கா.ம. வேங்கடராமையா அவர்கள் ஆவர்.

ஆலயங்களில் விதவிதமான  மரங்களை வளர்த்துஅம்மலர்களால்  பூஜித்து மனநிறைவு  கண்டவர்கள்  பக்தர்கள். அஷ்டபுஷ்பம்  என்று  சொல்லப்படும் எட்டு வகையான புஷ்பங்களைச் சாத்தி வழிபடுதல்  சமயமரபுகளில்  ஒன்றாகும்.

⏏⏏⏏